தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தை வெற்றியடையச் செய்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு மதிப்போ நன்றிக்கடனோ கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட அவர் இந்த மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கின்றார்.
அத்துடன் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளிலும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு மிகக்குறைவான அளவே கிடைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி குறிப்பிடுகின்றார்.
மிகவிரைவில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் தனதுபெயரே சீர்கெட்டுவிடும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
20ஆவது திருத்த யோசனை தற்சமயம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுவதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் இருப்பதோடு இவர்களுடன் சேர்த்தே 146 உறுப்பினர்கள் மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
சிலவேளைகளில் சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களது பலம் நாடாளுமன்றத்தில் மொட்டுக்கட்சிக்குக் கிடைக்காவிடத்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு பொதுஜன முன்னணி அரசாங்கம் சவாலை சந்திக்க நேரிடலாம் என்று விமர்சனம் வெளியிடப்பட்டு வருகின்றது.