அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட மாகாண சபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம், அது தொடர்பில் இந்தியா எந்த அச்சுறுத்தலையும் விடுக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் மாகாண சபைகளை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிடமுடியாது. நாம் இறைமையுள்ள நாடு.
இந்திய -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.
அதில் ஒன்று விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது. எனினும் இந்தியா அதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக இந்திய இலங்கை உடன்படிக்கை எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகின்றது.” என்றுள்ளார்.