இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை உயர்வு
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தாயுடன் வயலுக்கு கடந்த 14ம் திகதி சென்றபின்திடீரென காணாமல் போனார்.
பின்னர் உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
நான்கு பேர் கொண்ட கும்பல் அப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளதாகவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களைச் சொல்லி விடக்கூடாது என்பதற்காக, அப்பெண்ணின் நாக்கை அறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண், உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்துவிட்டதாகவும், கைகள் பாதியளவு முடங்கியுள்ளதாகவும், நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகிய நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்த போதும், அப் பெண்ணின் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அதிகாலை 2.30 மணிக்கு உத்தரபிரதேச பொலிஸார் அவரது உடலை எரித்துள்ளனர். இளம் பெண்ணின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் வீடுகளில் பூட்டி வைத்துமுள்ளதாக அறியவருகிறது.
இந்த பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்காக மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கபட்டு, 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, ஹத்ரஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும், மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டது போன்று, ஹத்ராஸ் எனும் இந்த இளம்பெண் கொலை வழக்கின் குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் எனக்கோரி சமூவலைத்தளங்களில் மக்கள் தங்கள் ஆதங்களை #JusticeForManishaValmiki #hangtherapist #RIPManishaValmiki உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளில் பதிவிட்டு வருகின்றனர்.