கடல் மாசுபாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே MT New Diamond கப்பலுக்கு வெளியேற அனுமதி வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபருக்கு இதுகுறித்து அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர், 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்படி, இலங்கை கடல் பரப்பில் இருந்து கப்பலை கொண்டு செல்வதற்கு அனுமதி அளிப்பதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தீப்பற்றி எரிந்த MT New Diamond எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக் கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.