இமாசல பிரதேசத்தில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
இமாசல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால் லஹால்- ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும்.
இதனைக் கருத்தில்கொண்டு, மணாலி- லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட, கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.
மேலும், குறித்த ரோதங் சுரங்கப்பாதைக்கு, வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது.
இது உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை ஊடாக எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இது இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட குறித்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.