நாட்டில் கொரோனா அச்ச நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், முடிந்தளவு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, போக்குவரத்து நடவடிக்களுக்காக முடிந்தளவு தமது சொந்த வாகனங்களையே பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் தமது அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அத்தியவசியமற்ற சடங்குகள் மற்றும் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சமூக இடைவெளியைப் பேணல், சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுதல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் போன்ற செயற்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பேருந்துகளில் பயணிகள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
அத்துடன் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்பாகக் கைகளை கழுவுவது, முகக் கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சேவையில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்