கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில்...
கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள் அநேகமானோர் பதிவான நிலையில் சுகாதார அமைச்சினால் கம்பஹா மாவட்டத்தினுள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சுகாதார அமைச்சினால் அவர்களின் வீடுகளுக்கு நோயாளர் காவு வண்டிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்வதை நிராகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சின் ஊடாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளர் காவு வண்டிகள் ஊடாக சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்லுமாறு தொற்றுக்குள்ளான பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக் கொண்டுள்ளார்.
சிகிச்சைக்காக செல்லாமல் புறக்கணித்தல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.