மஸ்கெலியா சாமிமலை, டீசைட் தோட்டத்தில் மேல் பிரிவில் ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (9) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஒன்றரை வயதுடைய பிரசாத் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல்போனதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டுள்ளார்.
இதனை, தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.