கொரோனா வைரஸின் கொடூரத்தை நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை. எனவே, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பேரு நாட்டின் நிலைமை ஏற்படும்.
புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டிய தேவையும் இதனால்தான் ஏற்பட்டுள்ளது – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பேரு நாடு ஆரம்பத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது, எனினும், அதன்பிறகு அந்நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளையும், அரச அறிவித்தல்களையும் உரியவகையில் கடைபிடிக்காததால் வைரஸ் வேகமாக பரவியது. சனத்தொகை அடிப்படையில் ஒப்பிட்டால் அந்நாட்டில்தான் அதிக மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
எமது நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவலை நாம் சுமார் ஒன்றரை மாதங்களில் கட்டுப்படுத்தினோம்.
ஏனைய நாடுகளில் கிராமத்துக்கு கிராமம் மரணங்கள்,குடியிருப்புகளில் மரணங்கள் என வைரஸின் கொடூரத்தன்மை உணரப்பட்டது. இங்கு 13 பேர்தான் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் 2ஆவது இடத்தில் இருக்கின்றோம். எனவே, இந்த வைரஸின் கொடூரத்தன்மையை நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை.
அதனால்தான் சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுபவர்கள்தான் கைது செய்யப்பட்டனர்,
புதிய வர்த்தமானி அறிவித்தல் வந்ததும் பொதுவெளியில் சமூகஇடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியதாவர்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற மறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள், அப்பாவி மக்களை ஒடுக்குவது இதன் நோக்கம் அல்ல, மாறாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இலக்காகும்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்பது மக்களின் நடத்தையிலேயே தங்கியுள்ளது.
உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்பதுடன், சுகதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். ‘ – என்றார்.