அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவு ஏற்படும் போது மலிவு விற்பனை கடையில் ஐந்து பேர் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். இவர்களில் இருவருக்கு சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
கடைக்கு பின்புறமாக இருந்த பாரிய மண்திட்டே இவ்வாறு சரிந்து வந்துள்ளது. இதனால் கடையில் உள்ள பொருட்களுக்கும் மற்றைய கடையில் ஒரு சமையலறைக்குமே சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த மண்சரிவு காரணமாக மலிவு விற்பனை கடையொன்றும் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் கடை ஒன்றுமே சேதமடைந்துள்ளன.
இந்த மண்திட்டு தொடர்ந்து சரியக்கூடிய அபாயம் காணப்படுவதனால் கடையில் தங்கியிருக்க வேண்டாம் எனவும் மண்திட்டுக்கு மேல் ஒரு வீட்டில் வசிப்பவர்களும் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அட்டன் நகரசபையின் தலைவர் எஸ். பாலசந்திரன் கருத்து தெரிவிக்கையில்.
கடந்த சில தினங்களாக அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் நிலை இருப்பதனால் கடைகளில் யாரும் தங்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம். அத்தோடு மேல் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது மழை தொடர்ந்து பெய்துவருவதனால் மண் அகற்றுவது ஆபத்தானது எனவே மழை குறைந்த பின் மண் அகற்றுவதற்கான நடடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.