பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து பட்டியலை பிரதமர் அலுவலகத்திடம் சமர்பித்துள்ளார்.
இதன்படி மோடியின் நிகரச்சொத்து மதிப்பு ஜூன் மாதம் 30 ஆம் திகதியின் நிலைவரப்படி 2 கோடியே 85 இலட்சமாகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36 இலட்சம் ரூபாய் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவருடத்தில் 3.3 இலட்சம் வங்கி வைப்புகள் மற்றும் 33 இலட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானத்தின் காரணமாக மோடியின் நிகரச் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதியின் நிலைவரப்படி 28 கோடியே 63 இலட்சம் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 32 கோடியே 30 இலட்சமாக இருந்துள்ள நிலையில், தற்போது சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் இதற்கு காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.