ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியிலிருந்து 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 09 உறுப்பினர்களுக்கு எதிர்கட்சியில் அல்லாமல் ஆளுங்கட்சியில் அமர்ந்து கொள்வதற்கான ஆசனங்களையும் தயார்செய்யும்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று கடிதம் அனுப்பிவைத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தவ்பிக் ஆகிய 04 உறுப்பினர்கள் 20ஆவது திருத்த யோசனைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்.
அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், முசரப் மற்றும் ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகே ஆகியோரே இவ்வாறு கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.