எந்தவித முன்னறிவித்தலும் இன்றி ஹட்டன் நகரபிரதேசத்துக்கு உட்பட்ட சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தாம் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த குடும்பங்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஹட்டன் நுகர்வோர் நிலையத்தின் ஊடாக ஹட்டன் - டிக்ஓயா நகரசபைக்குட்பட்ட பகுதிக்கு மாத்திரமே நீர் விநியோகம் மேற்கொள்ள அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடவடிக்கை எடுத்திருந்தாக மக்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தமக்கான குடிநீர் விநியோகம் நேற்று முதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வரட்சியான காலநிலையால் நீர் விநியோகம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் நீர்விநியோகம் வழமைக்கு திரும்பும் என, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.