web log free
January 10, 2025

”நான் யாருக்கும் பயப்பிட மாட்டேன்”

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

 

வணக்கம்,

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாக்களித்தனர் என்பது உண்மை. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முகங்கொடுத்து சிங்கள இனம், எமது மதம், தேசிய வளங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்ற நியாயமான அச்சம் இருந்ததால் அவர்கள் அணிதிரண்டனர்.

மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் 'நாட்டை காப்பாற்றுங்கள்' என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை.

எனது ஆட்சிக் காலத்தில், இனம், மதம் என்ற பேதமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்யும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவேன் என்றும், இந்த நாட்டின் உச்ச அரசியலமைப்பின் படி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பேன் என்றும் அன்று ருவன்வெலிசேய புன்னிய பூமியில் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் நான் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு மாதமும் நான் மூன்று நிகாயக்களினதும் முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளடங்கிய ஆலோசனை சபையை சந்தித்து ஆட்சி குறித்த அவர்களின் ஆலோசனையைப் பெறும் நடைமுறையொன்றையும் நான் பின்பற்றி வருகின்றேன்.

 

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பு, மத தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் பல உயிர்கள் பலியாகியிருந்தன. பாதாள உலக செயற்பாடுகள் தீவிரம் பெற்று நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்தது. இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்தது. புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பலவீனமடைந்திருந்த காரணத்தினால் நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்று தளங்கள் கூட தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

நான் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்கு பொருத்தமான அதிகாரிகளை நியமித்து அவர்களது பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் அளித்தேன். சீர்குலைந்திருந்த புலனாய்வுத்துறை சேவைகளை மறுசீரமைத்து அவற்றுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை எடுத்தேன்.

அந்த வகையில் எந்தவிதமான தீவிரவாதமும் மீண்டும் தலை தூக்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருளைக் கட்டுப்படுத்த மிகவும் முறையான மற்றும் செயற்திறமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று சிறைச்சாலைகளுக்குள்ளிருந்து போதைப்பொருள் கடத்தல் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொள்ள இனியும் இடமில்லை. இந்த நாட்டில் மக்கள் இனியும் பாதாள உலக கும்பல்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு பயந்து வாழ வேண்டியதில்லை. எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் இப்போது ஒரு விசேட செயலணியை அமைத்துள்ளேன்.

 

நாம் இதுவரை செய்த அனைத்துமே ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களினால் மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரமாகவே ஆகும்.

படைவீரர்களை காட்டிக்கொடுக்கும், தேசிய வளங்களை விற்கும், குறுகிய கால இலாபத்திற்காக எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கத் தயாராக இருக்கும், நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதிக்கும் யுகம் இப்போது முடிந்துவிட்டது. எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்குத் தயாரான, எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாத, சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு ஒரு தரப்பாக இல்லாத, ஒரு பெருமைமிக்க, இறைமை கொண்ட தேசமாக எமது நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளோம். அதனால்தான் இன்று பிராந்திய சக்திகளிடமிருந்தும் உலக வல்லரசுகளிடமிருந்தும் எமக்கு உரிய மரியாதை கிடைக்கின்றது.

மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தில் பல மனப்பான்மை மாற்றங்களைச் செய்ய முடிந்தது. ஜனாதிபதித் தேர்தலுடன் அதைத் தொடங்கினோம். பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் சுவரொட்டிகள் இல்லாத, அவமதிப்பு மற்றும் அவதூறுகளிலிருந்து விடுபட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் நாட்டிற்கு அறிமுகப்படுத்தினோம். அதன் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் முன்மாதிரியான ஒரு தேர்தலாக குறிப்பிடலாம். பெரும்பான்மையான வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தனர், தேர்தல் சட்ட மீறல்கள் குறைந்தபட்சமாகவே இருந்தன. வன்முறைகள் அல்லது தேர்தல் மோசடி பற்றி கூட கேட்கப்படவில்லை.

 

இந்த மாற்றத்துடன் மக்களும் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் பல முன்னாள் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்ற வாய்ப்பு கிடைக்காதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் விளைவாக, புதிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சில காலத்திற்கு முன்பு 225 பேருமே வேண்டாம் என்ற கருத்தில் இருந்த மக்களின் கௌரவத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகும், ஜனாதிபதி பதவி என்பது ஒரு பொறுப்பேயன்றி வரப்பிரசாதம் அல்ல என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நான் செயல்பட்டேன். அதன்படி, தேவையற்ற செலவுகள், விரயங்கள் மற்றும் பயனற்ற நடவடிக்கைகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த காலப்பிரிவில் நாங்கள் நீதித்துறைக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை. நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அனைத்தும் எந்தவொரு அரசியல் செல்வாக்குமின்றி தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன. அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் முறையை நாங்கள் முற்றிலும் நிராகரித்தோம். சட்டத்தின் ஆட்சியை நாம் எவ்வாறு உண்மையாக நிலைநிறுத்துகிறோம் என்பதை வார்த்தையால் அன்றி முன்மாதிரியாகக் காட்டினோம்.

உயர் அரசாங்க பதவிகளுக்கு பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர்களின் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம். இத்தகைய கொள்கையொன்றை இதற்கு முன்னர் எந்த அரசாங்கமும் செயல்படுத்தவில்லை. அரசியல் செல்வாக்கு காரணமாக பொருத்தமற்ற நபர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை இது மேலும் தடுத்தது.

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பாரிய வீழ்ச்சியை கண்டு 2.1% என்ற மிகவும் பலவீனமான நிலையில்  இருந்தது.

 

2014 இல் 4.3% ஆக குறைந்திருந்த வேலைவாய்ப்பின்மை 2019 ஆகும் போது 4.8% ஆக உயர்ந்தது.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி துரிதமாக வீழ்ச்சிகண்டிருந்த காரணத்தினால் நிதிப்பிரிவு சீர்குலைந்து பொருளாதாரம் பெரும் நிச்சயமற்ற நிலைக்கு முகம் கொடுத்திருந்தது.

சுற்றுலாத் துறை வீழ்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடான ஆண்டு வருமானம் குறைந்து கொண்டிருந்தது.

நாட்டின் கடன் சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தது. அரசாங்கம் மக்கள் மீது பெரும் வரிச்சுமையை சுமத்தியிருந்தது. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, சுதேச வணிகங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பல விரைவான நடவடிக்கைகளை எடுத்தோம்.

வரிச்சுமை குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. குறிப்பாக சம்பள வருவாய் மீதான நேரடி வரி குறைக்கப்பட்டதுடன் வட்டி மீதான நிறுத்தி வைக்கும் வரி நீக்கப்பட்டது.

உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு பல வரிச் சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரி முறைமைகள் எளிமைப்படுத்தப்பட்டன. உள்நாட்டு உற்பத்திக்கு சாதகமற்ற போட்டி இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வட்டி விகிதங்களை பெருமளவில் குறைப்பதன் மூலம், கடன்கள் தேவைப்படும் மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக படிப்படியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அந்நிய செலாவணி வீதத்தை நிலையானதாக பேண நடவடிக்கை எடுத்தோம்.

வேகமாக உயர்ந்து சென்ற வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்தினோம். அதேபோன்று எங்கள் நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வெளிநாட்டு கடன் தவணைகளையும் நாங்கள் செலுத்தினோம்.

 

கடந்த அரசாங்கம் உள்நாட்டு வழங்குனர்களுக்கு செலுத்தாதிருந்த நிலுவைத் தொகையில் பெருமளவை நாங்கள் செலுத்த நடவடிக்கை எடுத்தோம். உரத்திற்கு ரூ. 24 பில்லியனும், மருந்துகளுக்கு ரூ. 32 பில்லியனும், நிர்மாணத் துறைக்கு ரூ. 119 பில்லியனும், சிரேஷ்ட பிரஜைகளின் உதவித்தொகை ரூ. 20 பில்லியனும், பல்வேறு அமைச்சுக்களுக்கு சேவைகளை வழங்கியவர்களுக்கு ரூ. 47 பில்லியனும் செலுத்தினோம். இந்த வகையில் சமூகத்திற்கு நிதியை விடுவித்தது முடங்கிப்போன நாட்டின் பொருளாதார செயல்முறையை மீண்டும் செயல்படுத்த உதவியது.

எமது நாட்டில் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு புத்துயிரளிக்க குறுகிய காலத்தில் நாங்கள் பெருமளவு பணிகளை செய்துள்ளோம்.

நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை ரூ. 32 லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உர மானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க, மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டதுடன் சில விவசாய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. நெல், சோளம், தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி வரிகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. எத்தனொல் இறக்குமதி முற்றிலும் தடைசெய்யப்பட்டது.

நாடு முழுவதும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடுவதன் மூலமும், இளைய தலைமுறையினரை விவசாயத்திற்கு ஈர்ப்பதன் மூலமும், மக்களை வீட்டுத் தோட்டச் செய்கைக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்க முடிந்தது.

எத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும், எங்கள் ஏற்றுமதி வீழ்ச்சியடைய நாங்கள் இடமளிக்கவில்லை. தற்போது எங்கள் மொத்த ஏற்றுமதி வருவாய் முன்னைய ஆண்டுகளை விட அதிக அளவில் உள்ளது.

 

கிராமப்புற மக்களின் வறுமைக்கு தீர்வு காண்பது நமது பொருளாதாரக் கொள்கையில் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டியப பல துறைகளை நாம் இனம்கண்டுள்ளோம்.

நாட்டின் ஏழ்மையான குடும்பங்களை இலக்காகக் கொண்டு 100,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். இந்த ஒவ்வொரு வேலை வாய்ப்பின் மூலமும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிகவும் பொருத்தமானவர்களைத் தேடி 35,000 தொழில்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தொழில்கள் வழங்கப்படும்.

நாட்டின் செல்வத்தை செலவிட்டு கல்வி வழங்கப்பட்ட ஏராளமான பட்டதாரிகள் நீண்ட காலத்திற்கு வேலையில்லாமல் இருந்தால் அது கல்வி முறையின் தவறு. பல்கலைக்கழக கல்வி சீர்திருத்தங்கள் மூலம், எதிர்காலத்தில் அந்த பிழையை சரிசெய்வதுடன் இது வரை வேலையற்றிருந்த 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் மேலும் அவர்கள் நாட்டிற்கு உற்பத்தித் திறன்வாய்ந்த சேவையைச் செய்யத் தேவையான பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக, காணிகளை இழந்த 20,000 குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணிகளை  வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீரை வழங்குவதற்கான எங்கள் திட்டத்தின் கீழ் 429,000 குடும்பங்களுக்கு நாடு முழுவதும் நீர் வழங்குவதற்கான ஆரம்ப பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் கி.மீ வீதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மூன்று 10,000 கி.மீ திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

 

10,000 பாலம் கட்டுமான திட்டத்தின் கீழ் சுமார் 5,000 பாலங்களின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும், நகர்ப்புற குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் 20,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

4000 தோட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்படும்.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையில் வேறு எந்த வருடத்திலும் இதுபோன்ற அதிகரிப்பு காணப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களின் திறனை எதிர்காலத்தில் இதே முறையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் சாதாரண சூழ்நிலையில் செய்யவில்லை. பல சவால்களுக்கு மத்தியிலேயே செய்தோம். நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட நாள் முதல் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒரு சிறுபான்மை அரசாங்கத்துடனேயே பணியாற்ற வேண்டியிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சியிடமே இருந்த காரணத்தினால் எந்தவொரு சட்டத்தையும் வரவுசெலவுத்திட்டத்தையும் நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் கோவிட் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. 2020 ஜனவரியில் சீனாவின் வுஹான் நகரம் மூடப்பட்டபோது, உடனடியாக தீர்மானம் மேற்கொண்டு 33 இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வந்து, அவர்களை முறையாக தனிமைப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி, உலகின் பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியை அமைத்தோம்.

இலங்கையில் முதல் கோவிட் நோயாளி கண்டறியப்படும் போது, ஏற்படக்கூடிய கோவிட் அலையை கட்டுப்படுத்த ஒரு செயலணியை நாங்கள் ஏற்கனவே அமைத்து திட்டங்களை உருவாக்கத் தொடங்கியிருந்தோம். இதனால் கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இக்காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையில் பொருளாதார தாக்கத்தை குறைக்க அரசாங்கம் செயல்பட்டது. அத்தியாவசிய உணவை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான முறைகள் வகுக்கப்பட்டன. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.

நான் கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்தேன். இந்த ஆண்டு ஆகஸ்டில் ஒன்பது மாதங்கள் கழித்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் செயல்பட்ட விதத்தை மக்கள் அங்கீகரித்ததால்தான் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 2/3 பெரும்பான்மையை வழங்கினர்.

 

எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல.

கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது வேகமாக பரவும் கோவிட் வைரஸின் புதிய வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு புதிய சவால் என்ற போதும் இந்த முறை எமக்கு கடந்த கால அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனை அளவை அதிகரித்தல், தொற்றாளர்களையும் தொடர்புடையவர்களையும் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான தனிமைப்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்துதல், அவதானத்திற்குரிய பிரதேசங்களை மட்டும் வேறுபடுத்தி ஏனைய பிரதேசங்களில் இயல்புவாழ்க்கையை பேணுதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த அனுபவம் மிகவும் பயன்படும்.

கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் நாங்கள் ஒரு திட்டத்துடன் செயல்படுகிறோம். நோய் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது.

எனவே, நாம் அனைவரும் சுகாதார ஆலோசனைகளைப் உரிய முறையில் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட்டால், முதல் கொரோனா அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதைப் போலவே எதிர்காலத்திலும் இந்த புதிய சூழ்நிலையை நாம் கட்டுப்படுத்த முடியும்.

நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல துறைகளை அடையாளம் காண்டு, அவற்றுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும், அவர்களுக்கு பொருத்தமான விடயத் துறைகளையும் பணிகளையும் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதறகு தேவையான ஏற்பாடுகளை தங்கள் அமைச்சுக்களுக்கு நேரடி ஒதுக்கீடு செய்துள்ளதாலும், நிதிப் பொறுப்பைக் கொண்டிருப்பதாலும் தடையின்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும்.

அமைச்சுக்களை ஒதுக்கும் போது நாட்டின் பெரும்பான்மையான மக்களில் தாக்கம் செலுத்தும் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடி மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

'மகிழ்ச்சியான குடும்பம்' என்ற சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதில் பல்வேறு சமூக மட்டங்களில் வாழும் சமூகங்களின் வீட்டுத் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக தனியான மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிக அந்நிய செலாவணியை செலவிட்டு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, உள்நாட்டில் பல மருந்துகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம். மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய ஊழலை ஒழிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நோக்கத்திற்காக, மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கு ஒரு தனி இராஜாங்க அமைச்சு நிறுவப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, உற்பத்தித் திறன் வாய்ந்த குடிமக்களை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் திறன் மேம்பாடு மிகவும் முக்கியம். எனவே, இன்று கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

 

நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றையும் இரண்டு செயலணிகளையும் அமைத்துள்ளோம்.

சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத விஞ்ஞான கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத 10 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்பை (City Universities) உருவாக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தாதியர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமா சான்றிதழுக்கு பதிலாக ஒரு பட்டப்படிப்பு வரை படிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தேன். அதன்படி, நாட்டின் அனைத்து தாதியர் கல்லூரிகளையும் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இது எங்கள் தாதியர்கள் வெளிநாட்டு தொழில் சந்தையில் நுழைவதற்கான வாயிலைத் திறக்கும்.

எங்கள் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கவும் விளையாட்டு பொருளாதாரத்திற்கு வழி வகுக்கவும் மற்றும் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவும் நாட்டின் பல பிரதேசங்களில் அதன் பீடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல்முறையாக, பல்கலைக்கழக நுழைவைப் பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆங்கிலம், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை கட்டாய பாடங்களாக கற்பிப்பதற்கும் சர்வதேச தரத்திலான சான்றிதழை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

நான் வாக்குறுதியளித்தபடி, உயர் தரம் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், திறந்த பல்கலைக்கழக முறையை மேம்படுத்துவதற்கும் தொலை கல்வியை மேம்படுத்துவதற்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு திறந்த பல்கலைக்கழகங்களில் 10,000 புதிய மாணவர்களை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்காக சேர்ப்பதற்கும், அவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்து தொழில்செய்துகொண்டே கல்வியை வழங்குவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பாடத்திட்ட மறுசீரமைப்பின் ஊடாக அனைத்து பட்டப்படிப்பு திட்டங்களும் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நேரடியாக பங்களிக்கக்கூடிய பாடங்களாக மாறுவதை உறுதி செய்ய பல்கலைக்கழக அமைப்புக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இதன் போது தொழில்நுட்ப கல்வி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்க விசேட கவனம் செலுத்தப்படும்.

மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்ய, நாம் தொடர்ந்து மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும். இதன் காரணமாக என்னால் முடிந்த போதெல்லாம் நான் மக்களிடம் செல்கிறேன். கடந்த காலங்களில், இலங்கையின் பல பகுதிகளில் உள்ள மிகவும் கஷ்டமான கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தேன்.

இந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுவான பிரச்சினைகள் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வதற்கும், இது தொடர்பாக தேவையான முடிவுகளை எடுப்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக மக்களிடம் சென்று அவர்களது உண்மையான பிரச்சனைகளை விளங்கி அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வினைத்திறனான அரச சேவை மிகவும் முக்கியமானது. எனவே, சட்டத்தின் போர்வையில் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் மக்களின் நியாயமான தேவைகளை விரைவாக நிறைவேற்றுமாறு அனைத்து அரச ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது சரியாக நடக்கிறதா என்று கண்டறிய நான் அவ்வப்போது அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் செல்கிறேன். இதை தொடர்ந்து செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் தமது நிறுவனங்களின் பணிகள் நடைபெறும் விதம் குறித்து கண்காணிக்க வேண்டும்.

அரச நிருவாகத்தில் வீண் விரயத்தையும் ஊழலையும் அகற்றுவோம் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். எனவே, அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் விரயம் மற்றும் ஊழலை முற்றிலுமாக நிறுத்தவும், சம்பந்தப்பட்ட நபர்களின் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனநாயக நாடொன்றின் வெற்றி தங்கியிருக்கும் அடிப்படை அரசியலமைப்பாகும். 19 ஆவது திருத்தத்தால் ஏற்பட்ட குழப்பத்தை 20 ஆவது திருத்தத்தின் மூலம் எங்களால் அகற்ற முடிந்தது என்றாலும், இன்னும் சில சர்ச்சைகள் இருக்கவே செய்கின்றன. எனவே, புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிக்கவும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கும் நாங்கள் ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளோம்.

பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்ல மக்கள் எனக்கும் எங்கள் அரசாங்கத்திற்கும் மிகப் பெரும் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

தனிப்பட்ட விருப்பை விட திறமைக்கு இடமளிக்கும், தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக பொது நலன்களுக்கு முதலிடம் அளிக்கும், கடனை விட முதலீட்டை ஊக்குவிக்கும், பேச்சை விட செயலை மதிக்கும் வெற்றுக் கோசங்களைப் பார்க்கிலும் உண்மையான மக்கள் சேவையை மதிக்கும் ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும். இதற்காக அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. பல சவால்கள் எங்களுக்கு முன்னால் உள்ளன. அந்த சவால்களை வெற்றிகொண்டு, ஒரு குறிப்பிட்ட கொள்கை சட்டகத்திற்குள் செயல்பட்டு, திட்டமிட்டபடி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நாட்டை நேசிக்கும் அனைத்து இலங்கையர்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை.

கூட்டு முயற்சியின் விளைவாக எமது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த எல்.டீ.டீ.யீ பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. அன்று நம் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் ஒரே நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். குழு உணர்வுடன், ஒழுக்கப் பண்பாடுகளை மதித்து சவால்களுக்கு முகம்கொடுத்தனர். ஒருபோதும் முடிவடையாது என்று பலர் கூறிய போரை எமக்கு வெல்ல முடியும் என்றால் எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எமக்கு வெற்றிகொள்ள முடியுமாக இருக்க வேண்டும். என்றாலும் அதற்கான பொதுவான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சேவைகளை வினைத்திறனானதாக ஆக்கவும், ஊழலை ஒழிக்கவும், விரயங்களை குறைக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி மக்களும் பங்களிக்க வேண்டும்.

நான் எப்போதும் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்து விடுபட்டு ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்க மாட்டேன்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். என்னிடம் எனது நாடு குறித்த ஒரு தொலைநோக்கு உள்ளது. ஒரு பயனுறுதிமிக்க பிரஜையாக, ஒற்றுமை உணர்வோடு, ஒழுக்கப் பண்பாட்டுடன் செயற்பட்டு, உங்களினதும் எனதும் தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.11.18

 

 

Last modified on Wednesday, 18 November 2020 17:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd