web log free
December 05, 2025

மாமாவால் மருமகனுக்கு சிகிச்சை மனைவிக்கு கொரோனா

கொழும்பு- மாளிகாவத்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர், கொரோனா  தொற்றால் உயிரிழந்த தனது மாமனாரின் மரண சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக, பொலன்னறுவை வெலிகந்த வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று குறித்த நபர் பொலன்னறுவைக்கு பொது போக்குவரத்து பஸ்ஸில் பயணித்ததாகவும் இதன்போது,தம்புள்ளை பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் இணைந்து, அவரை பஸ்ஸில் இருந்து இறக்கி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர், இவ்வாறு பஸ்ஸில் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் பஸ்ஸை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி, தம்புள்ளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனரென, தம்புள்ளை பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.எம்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நபரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மாமனாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே உடனடியாகச் சென்று மரணச் சான்றிதழையும் பிசிஆர் அறிக்கையையும் பெற்று வருமாறு, இந்த நபரின் வெளிநாட்டிலுள்ள உறவினர் வழங்கிய ஆலோசனைக்கமையவே இவர், கொழும்பிலிருந்து அநுராதபுரம் செல்லும் இ.போ.ச பஸ்ஸில் சென்றுள்ளாரென தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸில் இவருடன் பயணித்த ஏனைய பயணிகளை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்புள்ளை பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.எம்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd