முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு கடந்த 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையால் வழக்கு விசாரணைகளை நடத்த முடியவில்லை.
நேற்று முன்தினம் குறித்த மனு மீதான விசாரணையின் போது, இன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படவள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சில் துணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள 3 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.
2015ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாய் நிதியில் சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவத்தில் இருவரும் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.