web log free
January 10, 2025

“மாதவிடாய்க்கு வரி”

அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார்.

“பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகும்” என்றார்

“உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள்,பாடசாலை மாணவிகள், ஏழ்மையானவர்களுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்கப்படுகிறது. நிவாரண விலையில் வழங்கப்படுகின்றது. சௌபாக்கிய அரசாங்கம், செல்வந்தர்களிடம் வரியை நீக்கிவிட்டு, அன்றாட தேவையான பொருட்களுக்கு வரியை அறவிடுகின்றது” என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், அணையடை ஆடைக்கான (Sanitary towels)வரியை 40 சதவீதம் குறைத்தது. அதற்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் அணையடை ஆடைக்கு 15 சதவீதமான வரியை அதிகரித்துள்ளது. மாதவிடாய் வரியின் மூலமாக பெண்கள் மட்டும் பாதிக்கப்படமாட்டார் என்றார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சிலர் இருக்கின்றனர். “அணையடை ஆடையை வாங்கமுடியாத காரணத்தால் பாடசாலைக்குச் செல்லமுடியாத மாணவிகள் பலர் இருக்கின்றனர். ஏழ்மையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் 50 சதவீதமான மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அகையால், அந்த வரியை நீக்குமாறு, ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்தார்.

Last modified on Tuesday, 24 November 2020 16:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd