கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்தவர்களின் சடலங்கள் பல, இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளன.
இவ்வாறான நிலையில், மரணமடைவோரின் சடலங்களை, உறவினர்கள் அல்லது பொறுப்பானவர்கள், பொறுப்பேற்காவிடின், அவ்வாறான சடலங்கள் அரச செலவில் தகனம் செய்யப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைவோரின் பூதவுடல்களை (ஜனாஸாக்கள்) தகனம் செய்வதற்கு எதிரான மனுக்களை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை, கொரோனாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த மனு சார்பாக இவ்வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
"கொரோனா தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்கள் அனைத்தும் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவரவர் சமய முறைப்படி இறுதிக்கிரிகைகள் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.