web log free
January 10, 2025

புலிகளின் திட்டம் அம்பலம்: குழந்தையுடன் கிளைமோர் மீட்பு

தமது குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்றைய தினம் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், பையொன்றில் மிகவும் சூட்சமமான முறையில் இந்த குண்டை மறைத்து, கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வலையமைப்பின் ஊடாகவே குறித்த நபருக்கு கிளைமோர் குண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸர்லாந்திலிருந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக கூறப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்து, கிளைமோர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து இலங்கை மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்ட 15வது சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுங்கேணி வனப் பகுதியில் இராணுவ தாக்குதலினால் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கோபியின் சகோதரர் ஒருவர் சுவிஸர்லாந்திலிருந்து, இலங்கை மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக தகவல் கிடைத்துள்ளதென பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அய்யக்கச்சி பகுதியிலுள்ள கோபியின் தாய் வாழும் வீட்டிற்கு முன்பாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக வெற்று காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் சிலவற்றையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டு, ஒன்று தசம் 800 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைக்குண்டு கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த ஒருவரினாலேயே, இந்த கிளைமோர் குண்டு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாடொன்றிலிருந்து இவருக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவித சந்தேகமும் எழக்கூடாது என்பதற்காகவே, தனது 7 வயதான குழந்தையையும், குறித்த பெண் தன்னுடன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திற்கும், குண்டொன்றை கொண்டு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குழுவின் இலக்கு தொடர்பில் இராணுவு புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd