நாட்டில் நேற்று (06) மேலும் 649 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 197 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 451 பேர் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரின் மரணம் நேற்று மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக மரண எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் (03) மரணம் இடம் பெற்றிருப்பதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 140ஆகும்.
கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் நபர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 06ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா நிலையாகும்.
கஹதுட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 05ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன் சிறுநீரக செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த வேளையில் 2020 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்று நிமோனியா நிலை ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.