web log free
January 10, 2025

பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து, படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடந்த மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டதுடன், வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்றைய வழக்கு விசாரணையின் போது, உரிய ஆவணங்களைக் கொண்டுவராததன் காரணமாக, அரச தரப்புச் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd