web log free
January 10, 2025

ஜனாஸா விவகாரம்; பிரதமர் தலைமையில் ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சுகாதாரத் தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்குத் தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் தெரிவித்தனர்.

ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுத்தருமாறு அங்கு வருகை தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் அலி சப்ரி, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முனசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd