ஹட்டன் – நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்த இரு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், அவர்களுக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆசிரியை மற்றும் அவரது குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான பாடசாலை ஆசிரியையுடன் நெருங்கி பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கே பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன்படி, நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான மாணவர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் – வென்ஞர் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இருவருக்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது