கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையால் கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடையை நீக்குவது தொடர்பில் தற்போது அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டினை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிருத்தி குழு கலந்துரையாடலை தொடர்ந்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதற்கு முன்னர் செயற்படுத்த வேண்டிய ஒழுங்குமுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சுகாதார வழிகாட்டுதல்களின்படி குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்த பின்னர் படிப்படியாக நாட்டை திறக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.