எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் பானுக ராஜபக்ஸ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஸ்க பெர்னாண்டோ மற்றும் ஜொன்சன் சாள்ஸ் ஜோடி 4.4 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
அவிஸ்க பெர்னாண்டோ 27 ஓட்டங்களையும், ஜொன்சன் சாள்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர். சரித் அசலங்க 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
சொஹைப் மாலிக்கும் தனஞ்சய டி சில்வாவும் நான்காம் விக்கெட்டுக்காக 43 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தனர். சொஹைப் மாலிக் 46 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் தனஞ்சய லக்ஸான் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் அமீர், ஷான் ஆராச்சிகே , லக்ஸான் சந்தகேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 189 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹஸருல்லா ஸஸாய், தனுஸ்க குணதிலக, அசன் அலி ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். காலி கிளாடியேட்டர்ஸ் அணி 1.4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் பானுக ராஜபக்ஸ 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களையும், அஸாம் கான் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரியுடன் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
பின்வரிசையில் ஷான் ஆராச்சிகே ஓட்டங்களைப் பெற்ற போதிலும் காலி கிளாடியேட்டர்ஸ் அணி தோல்வியின் பாதையில் தள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த வீரர்களாலும் பிரகாசிக்க முடியாமல் போக காலி கிளாடியேட்டர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
சொஹைப் மாலிக், உஸ்மான் ஸின்வாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். போட்டியின் 15 ஆவது ஓவருக்குப் பின்னர் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றி மிக இலகுவானது.
இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்காரர் விருதுக்கு சொஹைப் மாலிக்கும், தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்கவும் தெரிவாகினர்.