இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
இந்த சந்திப்பின் போது தமிழர் விவகாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்தாகவும், குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சமகால அரசியல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மீளவும் இயங்கச் செய்வது தொடர்பில் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என தூதுவர் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.