web log free
January 10, 2025

இம்மாத இறுதிக்குள் புதிய யோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் தலைமையில் மும்மொழிவு வரைபு பணி நடந்து வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைக் கட்சிகள் சமர்ப்பிக்கும்படி அரசு கோரியிருந்தது. இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தயாராகி வருகின்றார்.

வடக்கு மாகாண சபையின் முன்மொழிவுகளை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சமர்ப்பித்துள்ளார். இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை இம்மாத இறுதிக்குள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாகச் சென்று சமர்ப்பிப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்மொழிவு ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவது இல்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் அதை ஆளாளுக்கு அரசியல் செய்வார்கள் என்ற காரணத்தைக் கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவு ஆவணத்தில் இனப்பிரச்சினையின் தோற்றம், அரசமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள், அரசமைப்பின் 13ஆவது திருத்தம், அது குறித்த மஹிந்த அரசின் வாக்குறுதிகள், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள், தமிழர்களின் அபிலாஷைகள் போன்றவற்றை ஒவ்வொரு தலைப்புக்களில் வழங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

Last modified on Sunday, 20 December 2020 03:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd