web log free
January 10, 2025

‘விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய் கூறுகிறார்கள்’


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் அவர்களுக்கு கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள்தான் இருக்கின்றன.

ஒன்று – இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் எங்களுக்குப் பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை.

ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளை காட்டி ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரு புது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவை இரண்டும்தான் அதில் உண்டு. அதில் கால நீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமே இல்லை.

ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத்தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விஷமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அது தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd