web log free
January 10, 2025

'உதாசீனம் செய்தால் விபரீதங்களை சந்திக்கநேரிடும்’

ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய நாடுகள் சபை மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு. உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்தச் சபைதான் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்.

எனவே, ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தே செல்லும். இந்த விடயத்தில் நாட்டின் நலன் கருதி அரசு மிகவும் பக்குவமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் நாம் சர்வதேசத்தை மதித்து நடந்தோம். எமது இராஜதந்திர நகர்வுகளை உலகெங்கும் விஸ்தரித்தோம். அதனால்தான் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இருந்தன.

இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் முழுமையான பங்களிப்பை அரசுக்கு வழங்கி வருகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளிருந்து இலங்கைக்குக் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம். எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும்.

இலங்கை மீது புதிதாக ஐ.நா. பிரேரணை வந்தால் அதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. ஏனெனில், புதிய பிரேரணை வருவதற்கு இந்த அரசே வழிவகுத்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd