சுனாமி ஏற்பட்டு 16 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அதனை நினைவு கூறும் வகையில் நாடளாவிய ரீதியில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திவேண்டி, நாட்டின் 25 மாவட்டங்களிலும், இன்று விசேட வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று காலை 09-25 இல் இருந்து 09 – 27 வரையிலான இரண்டு நிமிடங்கள், நாட்டு மக்கள் அனைவரும், சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மதவழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நினைவு அஞ்சலிகளில் பங்கேட்கும் பொதுமக்களை சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் சுனாமி ஏற்பட்டு பல உயிர்கள் இழக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படும் போது மக்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக, அனர்த்தமுகாமைத்துவ பிரிவில் விசேட பிரிவுகள் ஸ்தாபிக்க்பட்டு, வானிலை அவதான நிலையம் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க எப்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுனாமி அனர்த்தத்தை முன்கூட்டியே அறிவதுடன், எச்சரிக்கைகளை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதற்கும், அவர்களை உரிய வழிமுறைகளில் பாதுகாக்கவும் வேண்டிய வழிமுறைகள் உருவாக்கப்ட்டு, அவை 24 மணி நேரமும் தயாராக செயற்ப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.