நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 தசம் 2 மில்லியனைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாத்திரம் 12 ஆயிரத்து 22 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 350 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்றினால் கடந்த ஆறு மாதங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 78 பேர் தமது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலமே குறித்த 78 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் உயிரிழப்பவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கட்ட போதும், முதலாவது உயிரிழப்பு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மாவட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.