யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் வேட்பாளராக சொலமன் சிறிலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே விரும்பினார். ஆனால், யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் எவரும் அவரை விரும்பவில்லை. மேயர் வேட்பாளர் தெரிவுக் கூட்டங்களில்அவரின் பெயரை எவரும் பரிந்துரைக்கவும் இல்லை.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற புதிய மேயர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்குக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஆனோல்ட்டை அவர்கள் விரும்பியமைக்கு இதுவே சாட்சி. கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் மட்டும் நடுநிலை வகித்திருந்தார். அவரின் இந்த நடுநிலையும் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. அவர் சுமந்திரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்தச் செயற்பாடு எமக்கு அதிருப்தியளிக்கின்றது.
அவருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்போம். சுமந்திரனின் ஆதரவாளர்கள் மூவர் இருந்தார்கள். இருவர் ஆனோல்ட்டை ஆதரித்தார்கள்” என்றார்.