இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஜனவரி 11 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிகளையும், பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளையும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது தற்போதளவில் கடினம் எனவும், அது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.