web log free
January 11, 2025

மலர்ந்துள்ள புத்தாண்டில் ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பிறக்கும் புத்தாண்டில் எத்தகைய தடைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை வெற்றிகொள்வதற்கான ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடம் உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுபீட்சத்தை நோக்கிய பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம். கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.

மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியுமென்று நம்பிக்கை கொள்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd