இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவம் வகையில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக, 25 மாவட்டங்களுக்கும் உயர் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்பு பணிகளுக்காக உயர் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் இன்று முதல் தமது கடமைகளில் ஈடுப்படவுள்ளனர்.
மேஜர் ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் கேணல் ஆகிய தரத்திலுள்ள இராணுவ அதிகாரிகள் இவ்வாறு மாவட்ட ரீதியான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புபட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உற்படுத்தல், சிகிச்சையளித்தல், மருந்துப் பொருள் விநியோகம், உலர் உணவு பொருள் விநியோகம், தொழில்நுட்ப தேவைகைளை பூர்த்தி செய்தல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் இன்று முதல் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.