கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவரான சம்பந்தன், புத்தாண்டு பிறப்புக்கு முதல்நாள் இரவு உடல் உபாதைகள் காரணமாக கொழும்பு ஆஸிரி மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பின்னர் மறுநாள் இரவு உடல்நிலை சீராக இருந்தமையால் சாதாரண கண்காணிப்பு விடுதிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து அவர் கொழும்பிலுள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதையறிந்து தொலைபேசியூடாக ஊடகவியலாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது, “நான் நலமுடன் இருக்கின்றேன். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டேன்” என்று பதிலளித்தார்.