கொட்டதெனியாவ நாவான மையானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்ட சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல – கொடிகந்த விஹாரையை சேர்ந்த 65 வயதான உடுவில தம்மசிறி தேரர் கடந்த 2ம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
65 வயதுடைய குறித்த தேரர் தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாருடன் மிரிஹான தெற்கு குற்றவிசாரணை அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.