மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகளின்றி முடிவடைந்ததுள்ளது.
நேற்று மாலை கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் மற்றும் தொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, தொழிற்சங்கங்கள் சார்பாக கலந்துகொண்டவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த போதும், முதலாளிமார் சம்மேளனத்தினர் அதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பேச்சுவார்த்தை எந்தவித தீர்மானங்களும் இன்றி முடிவடைந்துள்ளது.
எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான மாற்று வழிகளை அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் என்று கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்டத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.