சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 24 வயது நிரம்பிய லட்சுமணன், சில நாட்களுக்கு முன்பு மூர்மார்க்கெட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் பழைய செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார்.
தற்போது சென்னையில் செல்போன் திருட்டு அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது செல்போனை நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே பறித்துக்கொண்டு செல்கின்றனர். இந்தநிலையில் லட்சுமணன் தான் வாங்கிய பழைய செல்போனில், தனது சிம் கார்டை போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், லட்சுமணனுக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், இந்த செல்போன் ஒருவரின் தொலைந்துபோன செல்போன். எனவே விசாரணைக்காக நீங்கள் காவல் நிலையம் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து லட்சுமணன் மூர்மார்க்கெட்டில் ஒரு கடையில் வாங்கினேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து லட்சுமணனிடம் போலீசார், நாங்கள் அழைக்கும்போது, எங்களுடன் வந்து செல்போன் விற்ற நபரை அடையாளம் காட்ட வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு மன உளைச்சலில் இருந்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் பெற்றோரிடம் புலம்பியுள்ளார் லட்சுமணன்.
இந்தநிலையில் நேற்று காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே,மின்சார ரயிலில் அடிபட்டு, லட்சுமணன் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே பொலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணன் மரணம் தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.