அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா- இல்லையா என்பது குறித்து , ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விட, தீமைகள் இல்லை என்று கூறலாம்.
வடக்கில் உள்ள மக்களுக்காக அரசாங்கம் சில வேலைகளை செய்துள்ளது. எனினும் அது செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
இந்த வரவு-செலவுத் திட்டம் குறித்து நான் குறைசொல்லமாட்டேன். இதனை ஒரு தேர்தல் வரவு -செலவுத் திட்டம் என்று நான் கூறமாட்டேன்.
அரசாங்கம் கடன்களை தீர்க்க நிதி மூலங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கான திட்டங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.