web log free
January 11, 2025

மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு

விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ள  நிலையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேருடன் அந்நாட்டின் கலிமண்டன் மாகாணம் போண்டியானாக் நகருக்கு இன்று மதியம் போயிங் 737 - 500 ரக விமானம் புறப்பட்டது.
 
ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.

தீவு நகரான போண்டியானாக்கிற்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் பயனிக்கும்போது விமானம் மாயமாகியுள்ளது.

இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். ஜாவா கடற்பரப்பிற்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டதால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால், ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால், இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஆனாலும், கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை
நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற மீட்புப்படையினர் விமானம் கடலுக்குள் விழுந்ததா? அவ்வாறு விழுந்திருந்தால் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது? அவர்களில் யாரேனும் உயிருடனரா? என்பது குறித்து ஜாவா கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

62 பேருடன் சென்ற போயிங் 737 விமானம் மாயமாகியுள்ள நிலையில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகங்கள் குறித்தும், மாயமான போயிங் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து  மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Last modified on Saturday, 09 January 2021 14:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd