web log free
January 11, 2025

'தூபிகளை வடக்கில் முழுமையாக அழிக்கவேண்டும்'

மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளை தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும்.

எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்றுணிவை எடுத்துக்காட்டுகின்றது.

இறுதிப்போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியாகும்.

இதைப் பல்கலைக்கழகத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார்.

மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd