இந்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளில் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமானவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 50 வீதமானவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் சுகாதார தரப்பினர் துரிதமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 34 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது இலவசமாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு வழங்கும் தடுப்பூசிகளாகும்.
அது தவிர்ந்து மேலும் 50 வீதமானவர்களுக்கும் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும். அவை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதி உதவியில் நாட்டில் 50 வீதமானவர்களுக்கு வழங்க முடியும்.
ஆகவே ஒட்டு மொத்தமாக 70 வீதமானவர்களுக்கு இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.