இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடையை தடைசெய்யவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து 37 பேர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 54 பேர் வெளிநாடுகளில் இருந்த நிலையில் அவர்களில் 50 பேர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்த சட்டநடவடிக்கை குறித்து சபைக்கு விளக்கம் வழங்கினார்.
தீவிரவாதி சஹ்ரான் நடத்திய பயிற்சி முகாம்கள், அவருடன் தொடர்பிலிருந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்தும் அமைச்சர் பல தகவல்களை இன்று வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட விரிசல் நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க 09 சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் அதனைத்தடுக்க முடியாமற் போனது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முறையான விசாரணைகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட உள்நாட்டில் மேலும் 99 சந்தேக நபர்களும், வெளிநாடுகளில் வாழ்ந்த 33 இலங்கைப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு உளவுத்துறையுடன் இணைந்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 54 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 50 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 4 பேரும் அந்த நாடுகளில் வழக்கு விசாரணைகளின் பின் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள். இவர்கள் இனவாத செயற்பாடுகளுக்காக இலங்கையில் உள்ளவர்களுக்கு பணம் வழங்கிவைத்துள்ளனர். இவர்கள் தவிர, உள்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த 17 முஸ்லிம் பெண்கள் தயாராகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் விளக்கமறியலிலும், 7 பேர் தடுப்பிலும் உள்ளனர். எஞ்சிய 02 சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து கூர்மையான வாள்களை இறக்குமதி செய்த 7 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன் உம்மா, இஸ்புத், தாஹீர், முஜஹர்தீன் அல்லாஹ் மற்றும் சுப்பர் முஸ்லிம் ஆகிய 6 அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புக்கள் சார்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இஸ்லாம் இராஜியத்திற்காக மெதவச்சி, லேவல்ல, மதவாச்சி, அம்பாந்தோட்டை மற்றும் ஹிங்குல உள்ளிட்ட பகுதிகளில் சஹ்ரானினால் நடத்தப்பட்ட முகாம்கள் அடையாளம் காணப்பட்டு அதில் பங்கேற்றவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 ஜனவரியில் 37 இலங்கையர்கள் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துள்ளனர். அதேபோல இனிவரும் நாட்களில் அடிப்படைவாத இஸ்லாமிய புத்தகங்களையும் நாட்டிற்குள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்படும் 11 விதமான அடிப்படைவாத அமைப்புக்களும் தடைசெய்யப்படவுள்ளன. புர்கா அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய சிறுவர், பெண்கள் சிறுவயது திருமணத்தை மாற்றி பொதுவான சட்டத்திற்குள் அவர்களையும் சேர்க்கவுள்ளோம். விரைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்