web log free
December 05, 2025

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கையின் தேசியக்கொடி விவகாரம்

இலங்கையின் தேசியக் கொடி கால் துடைப்பமாகவும்,  றப்பர் செருப்பாகவும் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகிய பெரும் சர்ச்சையை  தற்போது ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இணையவழி விற்பனைத் தளமான அமெசனில் இது தொடர்பில் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உலகின் மிகவும் பிரபலமான இணையவழி வணிக நிறுவனமாகிய அமெசன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கை தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய பல பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இறப்பர் செருப்புகள், கால் துடைப்பங்கள், சால்வை, திரைச்சீலைகள், துவிச்சக்கர வண்டி போர்வைகள் என பல பொருட்கள் இலங்கையின்  தேசிய கொடி அலங்காரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில் இலங்கை தேசிய கொடியையொத்த கால் மிதி உள்ளிட்ட பொருட்கள்  தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இலங்கையர்கள் கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயற்பாடு மாத்திரமின்றி, நாட்டு மக்களுடைய மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடு என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தேசியக் கொடியில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது அதனை உள்ளபடியே அச்சிட்டு தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேசியக் கொடிக்கு இவ்வாறான அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போது, இது தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் வினவியபோது, இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான அவமதிப்பினை மேற்கொண்டவர்களை இனங்காண்பதற்கு தூதரங்கள் ஊடாகவும் உதவிகளை பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டின் நிறுவனத்தினால் இலங்கையின் தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்டுள்ள பங்கம் குறித்து தற்போதைய அரசாங்கம் வாய்த்திறக்காமலிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd