இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்த விஜயத்தின் போது பல இடங்களிற்கும் சென்று பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் ஒரு அங்கமாக இந்தியாவினால் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று நிர்மானப்பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இன் நிகழ்வில் யாழ் இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டம் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்திருந்தார். சந்திப்பினை முடிந்து திரும்பும் வழியில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோஷங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார்.
குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது