web log free
January 11, 2025

மாகாண சபைகள் விரைவில் தேர்தலை நடத்துங்கள் :ஜனாதிபதி பணிப்புரை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு  அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொகுதி முறை, எல்லை நிர்ணயம், ஐம்பதுக்கு ஐம்பது, பெண்களின் அமைப்பு உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபு அவர்களினாலே தோற்கடிக்கப்பட்டது. மாகாண சபைகள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தை நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டின் தேசியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, கடந்த 15 மாதங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கூறினார்.

ஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதனை வீழ்த்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரங்களுக்கு பலியாகி கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு எவ்வளவு தூரம் பின்னடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக முழு நாட்டுக்கும் பிக்குகளுக்கும் போர்வீரர்களுக்கும் ஏற்பட்ட அவல நிலையை மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

இந்த சக்திகள் அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்களை நாசப்படுத்த மீண்டும்  முயற்சிக்கின்றன. அதற்குப் பலியானால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி  வலியுறுத்தினார்.

பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜனக பண்டார தென்னகோன், பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெடகொட மற்றும் பொதுஜன முன்னணி மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd