web log free
January 11, 2025

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் யாழில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளையும் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

இந் நிலையில் இன்றையதினம் பல்வேறு தமிழ் கட்சிகளின்  பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி ரீதியாக தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு யாழ். கொக்குவிலில் உள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை நடைபெற்றது.  இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கூட்டமைப்பு சார்பில் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,  செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்புக்களில் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd