web log free
January 11, 2025

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்தி அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல்ப்படுத்தவேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்ப்படுத்தி அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல் படுத்தவேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று திருகோணமலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் சந்தித்த வேளையில்  வடக்கு கிழக்கு மற்றும் எமது மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக எமது காணி அபகரிப்பு, தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அத்துடன் எமக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்தி அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல் படுத்தவேண்டும் எனவும், இதன் மூலம் இவ்வாறான காணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நாமே தீர்வை பெற முடியும் என்பது தொடர்பாகவும் கோரிக்கை விடுத்தேன்.

எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்ப துறையை வடக்கு கிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரை செய்திருந்தேன். இதன் மூலம் பல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதனையும் சுட்டிக் காட்டியிருந்தேன். அத்துடன் துறைமுகங்களை மென்மேலும் அபிவிருத்தி செய்து அவசியமான இடங்களில் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் உருவாக்குவதன் மூலம் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்கலாம் என்பதனையும் பற்றி எடுத்துக்கூறி இருந்தேன். அத்துடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அழுத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உள்ளூர் பயண சேவைகளை இதன் மூலம் உருவாக்குவதோடு சென்னைக்குமான பயண கட்டமைப்புக்களை இங்கிருந்து ஏற்படுத்துவதன் மூலம் உல்லாச பிரயாண துறையினை மென்மேலும் அபிவிருத்தி செய்வதோடு இதன் மூலம் பல தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கலாம் என்பதனையும் எடுத்துரைத்திருந்தேன்.

அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பு எமது மக்களுக்கான எதிர்கால மாற்றத்தின் முதற்படி என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd