web log free
January 11, 2025

தினசரி ஆயிரம் ரூபா ஊதியம் கிடைத்தாலும் வேறு தொழில் சலுகைகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது: திகாம்பரம் எம்.பி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என சிலர் மார்தட்டுகின்றனர். ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படும் என தோட்டக் கம்பனிகள் அறிவித்து வருகின்றன. தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது   என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு நேற்று ஹட்டனில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

வேலை நேரம், வாக்குரிமை உட்பட தமக்கான உரிமைகளை பெண்கள் போராடியே வென்றெடுத்தனர். எனவே, பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை முன்னிறுத்தி மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் நினைவுகூரப்படுகின்றது.   ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண்ணின் பங்களிப்பு நிச்சயம் இருக்கின்றது. எனவே, பெண்களுக்கான உரிய அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும். உலகில் பல நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சில நாடுகளை பெண்கள் ஆள்கின்றனர்.எமது பெண்களின் வாழ்வும் மேம்பட வேண்டும். அதற்காக நாம் குரல் கொடுப்போம். குறிப்பாக பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் சம்பளத்துக்காக கூட போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சிலர் கொக்கரிக்கின்றனர். ஆனால் 12 அல்லது 15 நாட்கள்தான் வேலை வழங்கப்படும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் இல்லாமல்போகும் எனவும் கம்பனிகள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது? எமது மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் வேண்டும். எனவே, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்." - என்றார்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd